புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: பிஹார் முதல்வராக பதவியேற்றதிலிருந்து சுகாதார சேவைகளை மேம்படுத்த விரிவான முயற்சிகளை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.
கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் ஆஷா (சமூக நலப் பணியாளர்கள்) மற்றும் மம்தா (மகப்பேறு பணியாளர்கள்) பணியாளர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இதை மனதில் கொண்டு அவர்களது பணியை கவுரவிக்கும் வகையில் அவர்களின் கவுரவ ஊதியத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆஷா ஊழியர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.3,000-ஆக உயர்த்தப்படும்.
மகப்பேறு வார்டுகளில் பணிபுரியும் மம்தா பணியாளர்களுக்கு ஒரு குழந்தை பிறப்புக்கு ரூ.300-க்கு பதிலாக ரூ.600 ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்த நடவடிக்கையால் அவர்களின் மன உறுதி மேலும் அதிகரிக்கும். அத்துடன் கிராமப் புறங்களில் சுகாதார சேவைகளை வலுப்படுத்தவும் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.