புதுடெல்லி: மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்தது தொடர்பான வழக்கில், ‘ஆளுநரும் முதல்வரும் ஒரே உறையில் இரண்டு வாள்களாக இருக்க முடியாது’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்தது தொடர்பான விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களை நீதித்துறை காலக்கெடுவிற்குள் கட்டுப்படுத்த முடியாது என மத்திய அரசும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் போன்ற மாநிலங்களும் வாதிட்டன.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இன்று ஆஜரானார். அவர் தனது வாதத்தில், “ பொறுப்புள்ள அரசாங்கங்களில், ஆளுநரின் விருப்புரிமைக்கு இடமில்லை. ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட விருப்புரிமை என்பது குழப்பத்தையே உருவாக்கும்.
பிரிவு 163 என்பது அமைச்சரவையின் ஆலோசனையை எதிர்த்து அல்லது இல்லாமல் செயல்பட ஆளுநருக்கு பொது விருப்புரிமை அதிகாரத்தை வழங்கவில்லை. பிரிவு 163, ஆளுநர், அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறுகிறது.
அம்பேத்கரின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் நீதிபதி எம்.எம்.புஞ்சி கமிஷன் அறிக்கையின்படி, ‘அரசியலமைப்பின் கீழ் ஆளுநருக்கு அவரே செய்யக்கூடிய எந்தப் பணிகளும் இல்லை; ஆளுநர், எந்த குறிப்பிட்ட சூழ்நிலையிலும், அமைச்சகத்தை மீற முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் சட்டப்பேரவை செயல்பாட்டில் ஒரு பகுதியாக இருக்கிறார், ஆனால் அவர் மாநில சட்டப்பேரவையின் ஒரு பகுதியாக இல்லை. அவர் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் அல்ல. சட்டப்பேரவை செயல்பாட்டில் அவருக்கு ஒரு பங்கு இருக்கலாம். அதுவும் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில்தான் உள்ளது. ஆனால், அவர் மாநில நிர்வாகம் அல்லது சட்டமன்றத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது.
ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை ஆளுநரைக் கொண்டிருக்கும் என்று பிரிவு 168 கூறினாலும், மாநில சட்டப்பேரவையின் எந்த அவையிலும் ஆளுநருக்கு எந்த பொறுப்பும் ஒதுக்கப்படவில்லை. எனவே ஆளுநர் ஒரு சூப்பர் முதல்வரைப் போல செயல்பட முடியாது.
ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற அரசாங்கத்தின் நலனுக்காக, மாநிலத்தின் நல்லாட்சிக்கு முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் என்று பி.ஆர்.அம்பேத்கர் கூறுகிறார். அதற்கு ஆளுநர் ஒரு வசதி செய்பவர் மட்டுமே, தலையிடுபவர் அல்ல, குழப்பத்தை ஏற்படுத்துபவர் அல்ல. ஒரே உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது. ஆளுநரும் முதல்வரும் ஒரே உறையில் இரண்டு வாள்களாக இருக்க முடியாது.
ஆளுநருக்கு மூன்று வழிகள் மட்டுமே உள்ளன, அவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க விரும்பவில்லை என்றால், அவர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கட்டுப்படாமல் கூட, மசோதாவை ஒரு முறை மாநில சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது ஆளுநர் அந்த மசோதாவை குடியரசுத் தலைவரிடம் அனுப்பலாம். ஒப்புதலை நிறுத்தி வைப்பதன் மூலம் மசோதாவை தோல்வியடையச் செய்வதற்கான நான்காவது வழி, ஐந்தாவது வழிகள் இல்லை’ எனத் தெரிவித்தார்.