பெங்களூரு: பெங்களூரு நகரில் நடப்பு ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். ‘இது எதிர்பாராத அசம்பாவிதம்’ என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “மாநில அரசும், கிரிக்கெட் சங்கமும் ஐபிஎல் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு வெற்றி விழாவை இன்று ஏற்பாடு செய்தது. இது இப்படியொரு துயர சம்பவமாக மாறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மொத்தமே 35,000 பார்வையாளர்களுக்கு மட்டும்தான் பார்வையாளர் மாடத்தில் இடம் உள்ளது. ஆனால், அங்கு சுமார் 2 முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் வந்திருந்தனர்.
விதான் சவுதாவுக்கு எதிரே சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர். ஆனால், அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதை அரசு, கிரிக்கெட் சங்கம் மற்றும் மக்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். இது தொடர்பாக துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளோம். இந்த துயரம் கொடுத்த வலி வெற்றியின் மகிழ்ச்சியை அழித்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களை முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், சின்னசாமி மைதானத்தின் உள்ளே ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டம் திட்டமிட்டபடி நடந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு விவரம் > ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு – பெங்களூருவில் நடந்தது என்ன?