சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ‘ஆர்எஸ்எஸ்’ பற்றி பேசியது, அரசியல் ரீதியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன பேசினார், எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகள் என்ன? ஆர்எஸ்எஸ் அமைப்பு, இதை எப்படிப் பார்க்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் தனது உரையில், “வரும் தீபாவளி… இரட்டை தீபாவளியாக மாறும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். இதன்மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக குறையும்” என்று கூறியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“இந்திய மக்களின் வியர்வையால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் வணிகர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் ஜிஎஸ்டியில் பெரிய சீர்திருத்தங்களை செய்துள்ளோம். நாடு முழுவதும் வரிச்சுமையைக் குறைத்து உள்ளோம், வரி முறையை எளிமைப்படுத்தி உள்ளோம். 8 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மதிப்பாய்வை ஒருமுறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதற்காக, உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தியது. மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்தது. இதன்படி வரும் தீபாவளி பண்டிகையின்போது சாமானிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வரிகள் கணிசமாகக் குறைக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சிறு தொழில்முனைவோரும் பெரிதும் பலன் அடைவார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக குறையும். இது பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்” என்றார் பிரதமர் மோடி.
இது குறித்து மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “தற்போது 5 சதவிதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்ற நான்கு பிரிவுகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன்படி ஐந்து மற்றும் 18 ஆகிய இரு பிரிவுகளில் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இதன்படி ஜிஎஸ்டி அதிகபட்ச வரி 18 சதவீதமாகக் குறையும். எனினும் சில ஆடம்பர பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும்” என்று மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அறிவிப்பு ஒருபுறம் இருக்க, சுதந்திர தின உரையில், ஆர்எஸ்எஸ் பற்றி பிரதமர் மோடி கூறும்போது, “100 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் நிறுவப்பட்டது. அதன் தொண்டர்கள் ஒரு நூற்றாண்டு காலமாக தாய்நாட்டின் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளனர். சேவை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவை அதன் அடையாளங்கள்.
உலகின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு அமைப்பாக ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. அதன் சேவைக்கு பங்களித்த தொண்டர்களையும் வணங்குகிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அர்ப்பணிப்புள்ள பயணத்தில், தேசம் பெருமை கொள்கிறது. இந்த நூறு ஆண்டுகால சேவை என்பது ஒரு பெருமை மிக்க பொற்காலம்” என்று பிரதமர் மோடி பேசியது அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டது காங்கிரஸ் கட்சி. நாட்டின் சுதந்திரத்துக்காகவும், வலிமையான பாரதம் அமையவேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தியாகம் செய்தனர். ஆனால், அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காக பாஜக தலைவர்கள் தரம் தாழ்ந்து பேசுகின்றனர். பாஜக அதிகாரத்தில் நீடிப்பது ஒழுக்கக்கேடு ஆகும்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “செங்கோட்டையில் ஆர்எஸ்எஸ் பற்றி பிரதமர் பேசியது அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற குடியரசின் உணர்வை அப்பட்டமாக மீறுவதாகும். அடுத்த மாதம் பிரதமர் மோடிக்கு 75-வது பிறந்தநாள் வருவதால், ஆர்எஸ்எஸ் அமைப்பைத் திருப்திப்படுத்தவே இதுபோல பேசியுள்ளார்.
பிரதமர் மோடி இப்போது தனது பதவிக் காலத்தை நீட்டிக்க மோகன் பாககவத்தின் முழு தயவை நம்பியுள்ளார். தனிப்பட்ட மற்றும் அமைப்பின் லாபத்துக்காக சுதந்திர தினத்தை அரசியல் மயமாக்குவது நமது ஜனநாயக நெறிமுறைகளுக்கு பாதிப்பை உருவாக்கும்” என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறும்போது, “சுதந்திரத்துக்காகப் போராடிய மகாத்மா காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், காமராஜர், கொடிகாத்த குமரன் ஆகியோரை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. சுதந்திரத்துக்கான எந்தப் போராட்டத்திலும் ஆர்எஸ்எஸ் பங்கேற்றது இல்லை. சுதந்திரத்துக்குப் போராடியவர்களை கவுரவிக்க வேண்டிய நாளில் ஆர்எஸ்எஸ் குறித்து பிரதமர் மோடி பேசியது சுதந்திரத்துக்காக போராடியவர்களை அசிங்கப்படுத்தும் செயல்” என்று கொந்தளித்துள்ளார்.
பிரதமர் மோடி பேசியது குறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராம் மாதவ் கூறும்போது, “சுதந்திர தின உரையின்போது ஆர்எஸ்எஸ்ஸின் நூறு ஆண்டுகால வரலாற்றை பிரதமர் நரேந்திர மோடி அங்கீகரித்தது பாராட்டுக்குரியது. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகிய இரு அமைப்புகளும் சித்தாந்தம் தொடர்பாகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒன்றுபட்டுள்ளன. பாஜக அரசியலில் பணியாற்றுகிறது. ஆர்எஸ்எஸ் அதற்கு வெளியே தேசத்துக்காகவும் சமூக சேவைக்காகவும் செயல்படுகிறது.
பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே முரண்பாடுகள் உள்ளதாக ஊகங்கள் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஒரே சித்தாந்த குடையின் கீழ் இணைந்த இரண்டு அமைப்புகள் ஆகும். நாங்கள் ஒரே சித்தாந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, நாங்கள் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம், எங்கள் உறவில் எந்தப் பதற்றமும் இல்லை.
சிலர், அரசியல் காரணங்களுக்காக, எப்போதும் ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்த்துள்ளனர், உதாரணமாக சில காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்த்தனர். ஆனால், இறுதியில் ஆர்எஸ்எஸ் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்து மதத்துக்கும் நாட்டுக்கும் வேலை செய்கிறது என்பதை அறிந்தனர்.
நல்லவர்களை உருவாக்கும், நல்ல மனிதர்களை உருவாக்கும் வேலையை இந்த அமைப்பு செய்து வருகிறது, அது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிலர், ஆர்எஸ்எஸ்ஸை எதிர்த்தால் அரசியல் ரீதியாக பயனடையலாம் என்று நினைக்கிறார்கள்” என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராம் மாதவ் கூறியுள்ளார்.