பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்ததை, காங்கிரஸ் கட்சி விமர்சித்த நிலையில், சிவகுமாரின் தற்போதைய செயல் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் 73 விநாடிகள் கொண்ட காணொளியில், துணை முதல்வர் சிவகுமார், ஆர்எஸ்எஸ் கீதமான ‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே’ பாடலை சட்டப்பேரவையில் பாடுகிறார். சிவகுமாரின் ஆர்எஸ்எஸ் கீதத்தை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, ‘நமஸ்தே சதா வத்சலே மாத்ரிபூமே… டிகே சிவகுமார் நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடுவதைப் பார்த்தால், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் ஐசியுவில் கோமாவுக்கு சென்றுவிடுவார்கள்.
பிரதமர் மோடி செங்கோட்டையில் ஆர்எஸ்எஸ்ஸின் பங்களிப்பு பற்றிப் பேசிய பிறகு, பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் இப்போது ஆர்எஸ்எஸ்ஸைப் பாராட்டுகிறார்கள். சசி தரூர் முதல் டிகே சிவகுமார் வரை காங்கிரஸில் யாரும் ராகுலை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது’ என்றார்
இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி பேசிய டி.கே.சிவகுமார், “நான் ஒரு பிறவி காங்கிரஸ்காரன். ஒரு தலைவராக என் எதிரிகளையும் நண்பர்களையும் நான் அறிந்திருக்க வேண்டும். நான் அவர்களைப் பற்றிப் படித்திருக்கிறேன். ஆனால், நான் பாஜகவுடன் கைகோர்ப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. நான் காங்கிரஸை தொடர்ந்து வழிநடத்துவேன். நான் பிறந்ததிலிருந்து வாழ்நாள் முழுவதும் காங்கிரஸுடன் இருப்பேன்” என்று கூறினார்.