புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் சிங் எனும் பாபா ராம் ரஹீமுக்கு மீண்டும் 40 நாள் பரோல் கிடைத்துள்ளது. இவர் கடந்த 8 வருடங்களில் 375 நாள் வெளியில் வந்து சென்றது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பிரபல துறவியாக இருப்பவர் குர்மீத் சிங் எனும் பாபா ராம் ரஹீம். இவர் தனது டேரா சச்சா சவுதா மடத்தின் ஹரியானா ஆசிரமத்தில் 2 இளம் பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவானது. இதில் ராம் ரஹீம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, கடந்த 2017-ல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு 2019-ல் பத்திரிகையாளர் ராமச்சந்திர சத்ரபதி கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஹரியானாவின் ரோத்தக், சுனரியா சிறையில், 2017 முதல் பாபா ராம் ரஹீம் இருந்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் மீண்டும் 40 நாள் பரோல் கிடைத்துள்ளது. கடந்த 3 மாதங்களில் இவர் பரோலில் வருவது இது 2-வது முறையாகும். மேலும் 8 ஆண்டு சிறை வாழ்க்கையில் இவர் இதுவரை 18 முறை பரோல் பெற்றது சர்ச்சையாகி வருகிறது. 18 முறை பரோல் காரணமாக இவர் ஒரு வருடத்துக்கும் மேலாக சிறைக்கு வெளியில் இருந்துள்ளார்.
இவருக்கு தொடக்கத்தில் 5 ஆண்டுகள் வரை மற்ற கைதிகளை போல ஒன்று அல்லது இரண்டு முறை பரோல் கிடைத்தது. ஆனால் ஹரியானா அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தம் காரணமாக 2022, பிப்ரவரி 7 முதல் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 91 நாட்கள் பரோல் கிடைத்து வருகிறது. ஹரியானாவில் இவரை போல ஆயுள் தண்டனை கைதிகள் 2,824 பேர் உள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு, ராம் ரஹீமை போல் இவ்வளவு பரோல்கள் கிடைப்பதில்லை எனப் புகார் நிலவுகிறது.
குஜராத்தின் பில்கிஸ் பானு வழக்கை தவிர்த்து, பாபா ராம் ரஹீமுக்கு கிடைத்த பரோல், மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. கடந்த 2022 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு பிரமாணப் பத்திரம் அளித்திருந்தார். அதில், தனக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில், 10 பேர் தண்டனை பெற்ற பிறகு ஆயிரம் நாட்கள் பரோல் மற்றும் விடுமுறை எடுத்துள்ளதாக கூறியிருந்தார்.
ஆயுத வழக்கில் சிக்கிய பாலிவுட் நட்சத்திரம் சஞ்சய் தத், ஜெஸிகா லால் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மனு சர்மா ஆகியோரும் பரோல்கள் பெற்றதில் சர்ச்சையில் சிக்கினர்.