புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றின் வெற்றிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று காலை நடைபெற்றது. பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கூட்டணி சார்பில் இந்த முக்கிய கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மற்றும் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கான பாதுகாப்புப் படையின் ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பிரஹலாத் ஜோஷி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், என்டிஏ கூட்டணியைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தில் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. நாடாளுமன்றம் காலை 11 மணிக்குக் கூடியதும் மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பல்வேறு முக்கிய மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய அவசியம் உள்ளது. மசோதாக்கள் குறித்து முழுமையான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதால், நாட்டின் நலன் கருதி மசோதாக்களை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா ஆகியவை குறித்து இரண்டு நாட்கள் விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டன. இந்த மசோதாக்களை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. எனவே, நாளை முதல் மசோதாக்களை நிறைவேற்றுவதில் அரசு கவனம் செலுத்தும்.” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.