புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாஜக கொண்டாடும் வகையில் நாடு முழுவதிலும் ‘திரங்கா யாத்ரா (கொடி யாத்திரை)’ நடத்துகிறது.
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் ஏப்ரல் 22-ல் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய அரசு, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையில் ராணுவத்தின் துணிச்சலை எடுத்துச் சொல்லவும், அவர்களின் சாதனைகளை பட்டியலிடவும் பாஜக முடிவு செய்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் யாத்திரையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் எதிர்கொள்ள பாஜக தயாராகிறது.
தேசியக் கொடிகளுடன் பாஜகவினர் நடத்தும் இந்த யாத்திரை மூலம், பொதுமக்களுடன் கட்சியினர் நேரடியாகத் தொடர்புகொள்கின்றனர். ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கம் அளிக்க கருத்தரங்குகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலுமான பாஜகவினரின் இந்த கொடி யாத்திரை, மே 13 முதல் 23 வரை 11 நாட்களுக்கு நடைபெற உள்ளன. யாத்திரையின் பிரச்சாரத்தின் போது பல்வேறு மட்டங்களிலான பாஜகவினர் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு கொள்ள இருகிறார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. பிறகு, திங்கள்கிழமை பொதுச்செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வர்த்தகத்துறையின் பியூஷ் கோயல், மனோகர் லால் கட்டார், கிரண் ரிஜிஜு, பூபேந்திர யாதவ், அஸ்வினி வைஷ்ணவ் ஆகிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொடி யாத்திரைக்கான உத்தி வகுக்கப்பட்டு, யாத்திரை இன்று நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரம் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறும்போது, “திடீர் எனப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட விதமும், அந்த தகவல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மூலம் உலகுக்கு வழங்கப்பட்டதிலும் கட்சியின் முக்கிய வாக்கு வங்கிகள் ஏமாற்றமடைந்துள்ளன.
இந்த ஏமாற்றத்தை நீக்குவது எங்கள் கட்சிக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. நேற்று பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இச்சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும் நம்பிக்கையும் கட்சிக்கு உள்ளது. போர் நிறுத்த முடிவில் மூன்றாம் தரப்பினர் யாரும் ஈடுபடவில்லை என்பதையும், பாகிஸ்தான், பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது.
இவற்றை பொதுமக்கள் முன்பாக எடுத்துரைக்கவே இந்த கொடி யாத்திரை. மத்திய அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவிவரும் விமர்சனங்களையும் தடுத்து நிறுத்துவோம்.” எனத் தெரிவித்தனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு நேரடியான மற்றும் வலுவான பதிலடி கொடுப்பதே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம்.
இந்த தாக்குதல் நடவடிக்கையில், இந்திய ராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்று பெரும் வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுப்பதாகவே கருதப்பட்டது. இதன்பிறகு, திடீர் என அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் சிலரை ஏமாற்றமடையச் செய்ததாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.