புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று (திங்கள்கிழமை) விவாதம் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார், ஆனாலும் அமளி தொடர்ந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் ராணுவ பதிலடி நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகள் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், தேர்தல் ஆணையத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கடும் அமளி ஏற்பட்டு இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன. இதனையடுத்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 28, 29-ம் தேதிகளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் பதிலளிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியும் இந்த விவாதத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மக்களவையில் 16 மணி நேரம் விவாதிக்கப்படும். நாளை மாநிலங்களவையில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த விவாதத்தின் போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும், மீண்டும் தெரிவிப்பது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.