கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த தாக்குதல் நடந்து 11 நாட்களுக்கு பிறகு உரி சர்ஜிக்கல் தாக்குதலை இந்தியா நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் சுமார் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். ஜெய்ஷ் இமுகம்மது இயக்கத்தின் தற்கொலைப் படை இந்த தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடியாக 13 நாட்கள் கழித்து இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் மிராஜ் 2000 போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் கைபர் பகதுன்க்வா மாகாணத்தில் உள்ள பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்களில் இருந்த தீவிரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தியதை மத்திய அரசு அறிவித்த போது, முக்கிய எதிர்க்கட்சிகள் அதற்கு ஆதாரங்களை கேட்டன. ராணுவத்தின் நடவடிக்கையை குறைத்து மதிப்பிடும் வகையில் ஆதாரம் கேட்டவர்களுக்கு பலதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் முழுவதையும் இந்திய ராணுவம் ஆவணப்படுத்தி வருகிறது. முன்னதாக தீவிரவாதத்துக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும் முழு ஆதரவு அளிப்பதாக மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. எனினும், சிந்தூர் தாக்குதல் குறித்து வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த இந்திய ராணுவம் வீடியோவாகவும் ஆவணங்களாகவும் சேகரித்து வருகிறது.