புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியான இந்திய ராணுவத்தின், ‘ஆபரேஷன் சிந்தூர்’ அதிரடி நடவடிக்கைக்கான பெயரை பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர்-இ- தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி அழித்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் இந்த துல்லிய தாக்குதல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது கோட்டையான பஹாவல்பூர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் முரிட்கே தளம் ஆகியவையும் அழிக்கப்பட்டுள்ளன.
பெயரை இறுதி செய்த பிரதமர்: இந்நிலையில், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியான இந்திய ராணுவத்தின், ‘ஆபரேஷன் சிந்தூர்’. தாக்குதலின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பஹல்காமில் ஈடுபட்ட தீவிரவாதிகள், ஆண்களையே குறிவைத்து கொலை செய்தனர். அதுவும் பெரும்பாலும் அவர்களின் மனைவி கண் முன்னேயே சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக இந்தியப் பெண்களின் சக்தியை உணர வைக்கும், இந்திய ராணுவத்தின் பதிலடிக்கு இந்தியப் பெண்களின் அடையாளமாகக் கருதப்படும் நெற்றித் திலகத்தை குறிப்படும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.