ரபாட்: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் பகுதி 2 அல்லது பகுதி 3 ஆகியவை பாகிஸ்தானின் நடத்தையைப் பொறுத்து அமையும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இந்தியா சகிப்புத்தன்மை காட்டாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.
நேற்று வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இந்தியர்களிடம் உரையாடிய ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூரின் பகுதி 2 அல்லது பகுதி 3 நடவடிக்கைகள் தேவையா என்பது குறித்து நாங்கள் சொல்ல முடியாது. அது பாகிஸ்தானின் நடத்தையைப் பொறுத்தது. அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்புச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது, அரசாங்கம் ஒப்புதல் அளித்தால் அவர்கள் நடவடிக்கைக்குத் தயாரா என்பதுதான் எனது முதல் கேள்வி. அவர்கள் ஒரு நொடி கூட தாமதிக்காமல், முற்றிலும் தயாராக இருப்பதாக பதிலளித்தனர். பின்னர் நாங்கள் பிரதமர் மோடியை அணுகினோம், அவர் எங்களுக்கு ஆதரவு அளித்தார், எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள்.
பிரதமரும்கூட ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவே கூறியுள்ளார். எனவே தேவையெனில் அதை மீண்டும் தொடங்கலாம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியப் படைகள் எல்லையைத் தாண்டி பல பயங்கரவாத முகாம்களை அழித்த பிறகு, பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியபோது, “நாங்கள் நல்ல உறவுகளை விரும்புகிறோம், ஏனெனில் மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ‘நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் அண்டை நாடுகளை மாற்ற முடியாது’ என்று கூறினார். அதன் அடிப்படையில் போர் நிறுத்ததுக்கு ஒப்புக்கொண்டோம். நாங்கள் அவர்களை சரியான பாதைக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம்” என்று அவர் கூறினார்.
மேலும், “பஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதிகள் எங்கள் மக்களின் மதத்தைக் கேட்ட பிறகு கொன்றனர். ஆனால், நாங்கள் மதத்தின் அடிப்படையில் யாரையும் கொல்லவில்லை, ஆயுதப்படைகள் நமது மக்களைக் கொன்றவர்களை மட்டுமே கொன்றன. இந்தியாவில் மக்கள் எந்த மதத்தை நம்பினாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை. இதுதான் இந்தியாவின் குணம்” என்றார்
ராஜ்நாத் சிங் தற்போது மொராக்கோவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவுக்கு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.