புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து மாநிலங்களவையில் வரும் 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்திய முப்படைகளும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள், விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. போர் மூளும் சூழ்நிலை உருவானாலும் இந்த தாக்குதல் மே 7-ம் தேதி தொடங்கி 10-ம் தேதிக்குள் முடிந்துவிட்டது.
அப்போது பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தாக்குதலை நிறுத்தியது இந்தியா. ஆனால், “என்னுடைய பேச்சுவார்த்தையால்தான் இந்தியா – பாகிஸ்தான் போர் நின்றது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்தார். இந்த கருத்தை பல முறை அவர் கூறினார்.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இந்த தொடரில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ட்ரம்ப் கூறிய கருத்து குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் பற்றி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 16 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்று மக்களவை அலுவல் குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், வரும் 29-ம் தேதி மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பிரதமர் மோடி பேசுவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய 2 நாடுகள் பயணமாக நேற்று லண்டன் புறப்பட்டு சென்றார். வரும் 26-ம் தேதி வரை அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் நாடு திரும்பிய பிறகு 29-ம் தேதி மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, முப்படைகளின் துணிச்சலான தாக்குதல், ட்ரம்ப் கூறிய கருத்துக்கு பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.