புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் 6-ம் ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பிற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியின் வலுவான தலைமையை பாராட்டினர். ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.
பாதுகாப்பு படையினரை பாராட்டி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ராணுவ வீரர்களின் துணிச்சல் நமது தேசத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: எதிர்க்கட்சிகள் அரசியல் சாசனத்தை பற்றி பேசுகின்றன. ஆனால், காஷ்மீரில் அதனை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதத்துக்கு அழுத்தம் கொடுத்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் தவறான கணக்கை போட்டுவிட்டனர். இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டன என்பதே உண்மை. இதற்காக அவர்கள் வருத்தப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.