பெங்களூரு: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் தீவிர போர் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தான் விமானப்படை தளங்கள், வான் பாதுகாப்பு கவசங்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் பணிந்தது. அந்த நாட்டு ராணுவ மூத்த அதிகாரி, இந்திய ராணுவ மூத்த அதிகாரியை தொடர்பு கொண்டு போரை நிறுத்துமாறு கோரினார். இதையடுத்து, இரு நாடுகள் இடையே மே 10-ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதற்கிடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அவர்களது சந்தேகங்களுக்கு விமானப்படை தளபதி ஏ.பி.சிங் விரிவான விளக்கம் அளித்துள்ளார். இந்திய விமானப்படையின் 16-வது ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம்.கத்ரே நினைவு சொற்பொழிவு, பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ஏ.பி.சிங் பேசியதாவது: இந்திய அரசியல் தலைமையின் உறுதியான நிலைப்பாடு காரணமாகவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ மாபெரும் வெற்றி பெற்றது. இந்த ராணுவ நடவடிக்கையின்போது, நமது முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
தலைமைத் தளபதி அனில் சவுகான் முப்படைகளுக்கு இடையே பாலமாக செயல்பட்டார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அனைத்து உளவு அமைப்புகளையும் ஒன்றிணைத்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். பாகிஸ்தான் மக்களுக்கு சிறு பாதிப்புகூட இல்லாமல் 9 தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 தீவிரவாத முகாம்களும் தரைமட்டமாகின. முரித்கே நகரில் லஷ்கர் இ தொய்பா இயக்க மூத்த தலைவர்கள் தங்கியிருந்த அந்த அமைப்பின் தலைமையகம் முழுமையாக தகர்க்கப்பட்டது.
புதிய உலக சாதனை: இதைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் போர் தொடுத்தது. அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த போரில் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மிக முக்கிய பங்கு வகித்தது. எஸ்-400 ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய எல்லையில் இருந்து சுமார் 300 கி.மீ. தூரத்தில் பறந்த பாகிஸ்தானின் உளவு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன்மூலம், மிக அதிக தொலைவில் பறந்த உளவு விமானத்தை தரையில் இருந்து சுட்டு வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தோம். ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
எஃப்-16 போர் விமானங்கள் அழிப்பு: சுகோய் போர் விமானம் மூலம் பிரம்மோஸ் ஏவுகணைகள் வீசப்பட்டதில், பாகிஸ்தானின் ஜகோபாபாத்தில் உள்ள ஷாபாஸ் விமானப்படை தளம் உருக்குலைந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த எஃப்-16 ரக போர் விமானங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மற்றும் ஓர் உளவு விமானம் கடுமையாக சேதமடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. போரில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்கள், ரேடார்கள் முழுமையாக அழிக்கப்பட்டன.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்தது மரபு சார்ந்த போர் அல்ல. இந்த உயர்தொழில்நுட்ப போர் சுமார் 90 மணி நேரம் நீடித்தது. பெரும்பாலும் வான்வழி தாக்குதல்களே நடந்தன. இதில், பாகிஸ்தான் ராணுவ ட்ரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்களால் இந்திய எல்லையை தாண்ட முடியவில்லை அவை அனைத்தும் இந்தியாவின் ‘ஆகாஷ்’, எம்ஆர்எஸ்ஏஎம் (நடுத்தர தொலைவு), எல்ஆர்எஸ்ஏஎம் (நீண்ட தொலைவு) வகை ஏவுகணைகளால் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால், இந்தியராணுவ தளங்கள், நிலைகள், இந்திய விமானப்படை தளங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலை முறியடித்ததில் உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணைகள் மிக முக்கிய பங்கு வகித்தன. இவ்வாறு அவர் பேசினார். ‘‘இந்தியா – பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘சரியான நேரத்தில் சரியான முடிவு’ – ‘‘கடந்த 2019-ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. ஆனால், பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அப்போது, போதிய ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்க முடியவில்லை. ஆனால், தற்போது ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது மற்றும் பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் கடுமையாக சேதமடைந்தது தொடர்பாக செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
போர் நிறுத்தம் தொடர்பாக சிலர் எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை அழிப்பதுதான் ஆபரேஷன் சிந்தூரின் குறிக்கோள். அதில் முழு வெற்றி அடைந்துவிட்டோம். எனவே, போரை நிறுத்தியதில் எந்த தவறும் இல்லை. நமது நாடு மிக சரியான நேரத்தில், மிக சரியான முடிவைத்தான் எடுத்துள்ளது’’ என்று ஏ.பி.சிங் தெரிவித்தார்.