புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து அடுத்த வாரம் மக்களவையில் 16 மணி நேரம், மாநிலங்களவையில் 9 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று அலுவல் ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை கூடியதும் காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி நிலவியது.