புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ரிஜிஜு, “அவையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அதிக ஒருங்கிணைப்பு தேவை. நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்றார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து போர் நிறுத்தம் ஏற்பட்டது தன்னால்தான் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த சர்ச்சையை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், இதுகுறித்து “அரசு நாடாளுமன்றத்தில் சரியான முறையில் பதிலளிக்கும்” என்று கிரண் ரிஜிஜு கூறினார். மேலும், “நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கான எம்.பிக்களின் ஆதரவு கையொப்பங்களின் எண்ணிக்கை ஏற்கனவே 100 ஐத் தாண்டியுள்ளது” என்று அவர் கூறினார்.
மழைக்கால கூட்டத்தொடரில் பிஹாரின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ட்ரம்பின் கருத்து உட்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன.