புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை முழுவதும் ஆச்சரியங்கள் நிறைந்தவை என்று அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஜான் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் அரசியல் தலைமை, ராணுவத்துக்கு இடையே மிக நெருங்கிய ஒத்துழைப்பு நிலவுகிறது. ஆபரேஷன் சிந்தூர் போரின்போது தரை, வான், கடல் பரப்பு என அனைத்து தளங்களிலும் இந்தியாவின் முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன.
இது மிகவும் அபூர்வமானது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை முழுவதும் ஆச்சரியங்கள் நிறைந்தவை. இவ்வாறு ஜான் ஸ்பென்சர் தெரிவித்தார். மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் சமீர் காமத், புனேவில்கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பார்த்து உலக நாடுகள் வியப்பில் ஆழ்ந்தன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்கூடிய ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசம், பாகிஸ்தான் ட்ரோன்களை நடுவானில் துல்லியமாக தாக்கி அழித்தது. பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தான் விமான படைத் தளங்களை துவம்சம் செய்தன. இவ்வாறு டிஆர்டிஓ தலைவர் சமீர் காமத் தெரிவித்தார்.
சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: ரஷ்ய தயாரிப்பான எஸ்-400 ஏவுகணைகள் மூலம் சுமார் 300 கி.மீ. தொலைவில் பறந்து கொண்டிருந்த பாகிஸ்தானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இவ்வளவு தொலைவில் பறந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது, உலக வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகளால் இந்திய எல்லையை தாண்ட முடியவில்லை. இவ்வாறு சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.