புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, 4 முதல் 5 போர் விமானங்கள், ரேடார்கள், கட்டுப்பாட்டு மையங்கள், ஓடுபாதைகள் உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் இழந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக இந்திய விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் படை தினம் வரும் 8-ம் தேதி கொண்டாடப்பட் உள்ள நிலையில், அதை முன்னிட்டு டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி. சிங், இந்திய விமானப் படையின் தொலைநோக்குத் திட்டங்கள், ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புகள் உள்ளிட்டவை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியது: “விமானப்படை தனது போர் திறன்களை மேம்படுத்த 2047-க்கான செயல்திட்ட வரைபடத்தை உருவாக்கியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி என்பது முப்படைகளின் கூட்டு உணர்வுக்குக் கிடைத்த வெற்றி. ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் ராணுவம் அதிக இழப்புகளைச் சந்தித்தது. குறிப்பாக, நீண்ட தூர தாக்குதலுக்கான 4 முதல் 5 போர் விமானங்கள், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, ரேடார்கள், ஓடுபாதைகள், ஹேங்கர்கள் உள்ளிட்ட இழப்புகளை நாம் பாகிஸ்தானுக்கு ஏற்படுத்தினோம்.
இந்தியா தெளிவான நோக்கத்துடன் ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது. குறிக்கோள் அடையப்பட்ட உடன் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்தது. உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது. இந்தியாவின் ராணுவ மற்றும் சிவிலியன் கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும், எந்தவொரு எதிரியின் அச்சுறுத்தலுக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கவும் ஒரு உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் திட்டத்தை பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 அன்று அறிவித்தார்.
அதன் அடிப்படையில், சுதர்சன சக்கரா எனும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதில் முப்படைகளும் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளன. ஆபரேஷன் சிந்தூரின்போது ரஷ்யாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு இந்திய கட்டமைப்புகளை பாதுகாத்த நிலையில், உள்நாட்டு தயாரிப்பாக சுதர்சன சக்கரா உருவாக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், கூடுதலாக எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காத ஏ.பி. சிங், அந்த தளம் மிகவும் நல்ல தளம் என பதிலளித்தார்.