புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, நமது படைகளின் கைகளை அரசே கட்டிப்போட்டுள்ளது என்று மக்களவையில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவையில் பேசியது: “ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்படுவதற்கு முன்பே, நமது பாதுகாப்புப் படைகளுடனும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசுடனும் பாறையைப் போல் உறுதியாக நிற்போம் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் உறுதி அளித்தன. நான் எந்த ராணுவ வீரருடன் கைகுலுக்கும்போதும் அவரை நாட்டுக்காக போராட தயாராக இருக்கும் ஒரு புலியைப் போலவே பார்க்கிறேன். இருப்பினும், ஒரு புலிக்கு முழுமையான சுதந்திரம் தேவை. நீங்கள் அதை கட்டிப்போட முடியாது.
இரண்டு முக்கிய வார்த்தைகள் உள்ளன. ஒன்று, அரசியல் விருப்பம், மற்றொன்று செயல்பாட்டு சுதந்திரம் (political will and freedom of operation) நீங்கள் நமது பாதுகாப்புப் படையை போருக்கு இட்டுச் செல்வதாக இருந்தால், முதலில் உங்களிடம் 100% அரசியல் விருப்பம் இருக்க வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசும்போது, ஆபரேஷன் சிந்தூர் அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி, 22 நிமிடங்கள் நீடித்தது என்று கூறினார். பின்னர், அதிர்ச்சியூட்டும் ஒரு விஷயத்தை அவர் கூறினார். அதாவது, அதிகாலை 1.35 மணிக்கு இந்திய டிஜிஎம்ஓ, பாகிஸ்தான் டிஜிஎம்ஓவை அழைத்து நாங்கள் போரை தீவிரப்படுத்த விரும்பவில்லை என்றும் ராணுவ இலக்குகள் குறிவைக்கப்படவில்லை என்றும் மற்ற இலக்குகளை மட்டுமே குறிவைத்ததாகவும் தெரிவித்ததாகக் கூறினார்.
நீங்கள் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்த உத்தரவிட்டீர்கள். ஆனால், அதன் வான் பாதுகாப்பை தாக்க வேண்டாம் என்று நமது விமானிகளுக்கு உத்தரவிட்டுள்ளீர்கள். இத்தகைய சூழலில் நமது விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவது உறுதி. உங்கள் செயல் மூலம் நீங்கள் நமது விமானிகளின் கைகளைக் கட்டிவிட்டீர்கள்” என்று ராகுல் காந்தி பேசினார்.