புதுடெல்லி: இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள், உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு எச்சரிக்கை பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. ஆனால் இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய செய்தித்துறை அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அமைப்பு(பிஐபி) தனது எக்ஸ் தளத்தில் நேற்று கூறியுள்ளதாவது: சமோசா, ஜிலேபி, லட்டு போன்ற உணவுகளுக்கு எச்சரிக்கை வாசகங்கள் வைக்குமாறு மத்திய அரசு நடத்தும் கேண்டீன்களுக்கு எந்தவித உத்தரவையும் சுகாதாரத்துறை அமைச்சகம் பிறப்பிக்கவில்லை.
சுகாதாரத்துறை அமைச்சகம் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்தச் செய்திகளில் உண்மை இல்லை. இவ்வாறு பிஐபி தெரிவித்துள்ளது.