புதுடெல்லி: நமது நாட்டில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமோசா, ஜிலேபி போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு பலகைகள் வைக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்புப் பலகையில் நாம் தினமும் உண்ணும் அன்றாட சிற்றுண்டி உணவுகளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல் இடம்பெறவுள்ளது. உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதன் மூலம் உடல் பருமனைக் குறைக்க முடியும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. சமோசா, ஜிலேபி போன்ற உணவு வகைகள் உடலுக்கு தீங்கானது என்று கூறப்படுகிறது.
சிகரெட் பாக்கெட்களில் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெறும் என்று இதயவியல் சங்கத்தின் நாக்பூர் பகுதி தலைவர் அமர் ஆம்லே தெரிவித்தார்.