புது டெல்லி: தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பு, ரேபிஸ் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் இந்த நிலைமையை ஆபத்தானது என்றும், தொந்தரவானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
டெல்லியில் நாய் கடியால் ரேபிஸ் நோய் தாக்கி ஆறு வயது சிறுமியின் துயர மரணம் குறித்து வெளியான ஊடக செய்திகள அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இது குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், “இந்தச் செய்தியில் மிகவும் கவலையளிக்கும், ஆபத்தான பல புள்ளிவிவரங்கள் உள்ளன. நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகின்றன. அவற்றில் பல ரேபிஸ் தொற்றுக்கு வழிவகுத்தன.
இறுதியில், இந்த கொடிய நோய்க்கு இரையாகுபவர்கள் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள்தான். இது மிகவும் ஆபத்தானது மற்றும் தொந்தரவளிக்கக்கூடிய விஷயமாகும். இதனை நாங்கள் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம். இந்த விஷயத்தை தாமாக முன்வந்து ரிட் மனுவாகக் கருதி, தேவையான வழிகாட்டுதல்களுக்காக இந்திய தலைமையின் நீதிபதியின் முன்பு உரிய அறிக்கைகளுடன் முன்வைக்க உத்தரவிட்டுள்ளோம்” என்று தெரிவித்தனர்
37 லட்சம் நாய்க்கடி பாதிப்புகள்: 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் 37 லட்சத்துக்கும் அதிகமான நாய்க்கடி பாதிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜூலை 22 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் பகிர்ந்துகொண்ட தரவுகளின்படி, இந்தியாவில் 2024-ம் ஆண்டில் நாய்க்கடி பாதிப்பு சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 37,17,336 ஆக இருந்தது. அதே நேரத்தில் ரேபிஸ் இறப்புகளும் கடந்த ஆண்டு 54 ஆக இருந்தது.
இதுபற்றி மத்திய அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் வெளியிட்ட தகவலில், ”தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது நகராட்சிகளின் பொறுப்பு. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்தை நகராட்சி நிர்வாகங்கள் செயல்படுத்தி வருகின்றன. தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தும் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ஏபிசி) விதிகள் 2023-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு நவம்பர் 2024-இல் ஆலோசனைகளை வழங்கியது” என்று அவர் கூறினார்.