புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்ட செயலிகள் வாயிலாக சட்டவிரோதமாக ரூ. 2,000 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவண் உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா, திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த வழக்கில், நேற்று பாலிவுட் நடிகர் சோனு சூட், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
வரும் 22-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ராபின் உத்தப்பா ஆஜராக வேண்டும் என சம்மனில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுவராஜ் சிங் 23-ம் தேதியும், நடிகர் சோனு சூட் 24-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.