புதுடெல்லி: ஆக்ராவில் நடைபெற்ற கட்டாய மதமாற்ற சம்பவங்களில் பெண்களை குறிவைக்க ஒரு கும்பல் ஆன்லைன் கேமிங், டார்க் வெப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆக்ரா காவல் ஆணையர் தீபக் குமார் கூறியதாவது: ஹரியானா, காஷ்மீர், ஆக்ராவில் கடந்த மூன்று மாதங்களாகவே இளம்பெண்களை குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து ஒரு கும்பல் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, அவர்கள் ஆன்லைன் கேம்ஸ், டார்க் வெப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தியுள்ளது பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்து மதத்தை விமர்சித்தும் இஸ்லாம் மதத்தை ஊக்குவித்தும் காஷ்மீரைச் சேர்ந்த சில பெண்கள் பேசி இந்த கட்டாய மதமாற்ற கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ள இந்து பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலமாக தன்வீர் அகமது மற்றும் சஹில் அதீம் ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து பேசியுள்ளனர்.
அவர்கள் படிப்படியாக மத சித்தாந்தத்தை பெண்கள் மனதில் விதைத்து அவர்களை கட்டாய மதம் மாற்றம் செய்வதற்கு மூளைச் சலவை செய்துள்ளனர். இதில் மற்றொரு குற்றவாளியான ரகுமான் குரேஷி, இதுபோன்ற கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளுக்கு கூட்டு நிதியளித்தல் மூலம் பணத்தை திரட்டியுள்ளார்.
கிரிப்டோகரன்சி மற்றும் வெளிநாட்டு கரன்சி மூலமான பணப்பரிவர்த்தனைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். காசா முனைப் பகுதியைச் சேர்ந்த சில தனிநபர்களும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது பெண் அளித்த வாக்குமூலம் இந்த கட்டாய மதமாற்ற மோசடி சம்பவத்துக்கு முக்கிய சாட்சியாக அமைந்துள்ளது. இவ்வாறு தீபக் குமார் தெரிவித்தார்.