பெங்களூரு: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கும் வகையில் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது.
இந்த சட்டத்தின்படி, ஆன்லைனில் பணம் வைத்து சூதாட்டம் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவோருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் கேமிங் நிறுவனமான ‘ஏ23’, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனு நீதிபதி பி.எம் ஷியாம் பிரசாத் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “எங்களது நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசின் புதிய சட்டத்தால் எங்களது நிறுவனம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இவ்வழக்கில் விசாரணை முடியும்வரை சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நாடாளுமன்றம் கொண்டுவந்த சட்டத்தை நிறுத்தக் கோருவது ஏற்புடையது அல்ல. அந்த சட்டத்தின் திறனை நீதிமன்றம் ஆராய்வது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது” என்றார்.
அதற்கு நீதிபதி, “இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட இருக்கிறதா? இந்த மனு தொடர்பான பதிலை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.