புதுடெல்லி: டெல்லியில் ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க நினைத்த மூதாட்டியிடம் ரூ.77 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் வசிப்பவர் நீரு (62). தனியாக வசிக்கும் இவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக மருத்துவர்கள் பல்வேறு மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். அத்துடன் தூக்க மாத்திரையையும் அவர் பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தூக்க மாத்திரை உட்பட தனக்கு தேவையான மருந்துகளை வாங்க இணையதளத்தில் உள்ள பல மருந்து கடைகளை தேடி ஆர்டர் செய்துள்ளார். அதன் பிறகு அதை மறந்துவிட்டார்.
அதன் பிறகு நீருவின் தொலைபேசியில் ஒருவர் பேசினார். தன்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார். தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை வாங்கியதாகவும் டெல்லியில் போதை பொருட்களை புழக்கத்தில் விடுத்துள்ளதாகவும் நீரு மீது குற்றம் சுமத்தினார்.
இதனால் நீரு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் வங்கி கணக்கை சரி பார்க்க பணத்தை அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் கைது செய்வோம் என்று அந்த போலி அதிகாரி மிரட்டியுள்ளார். பயந்து போன நீரு முதலில் ரூ.3 லட்சம் அனுப்பி உள்ளார்.
பத்து நாட்கள் கழித்து மீண்டும் ஒருவர் பேசினார். அவரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார். நீருவின் பணத்தை மீட்டு தருவதாக கூறி முதலில் ரூ.20 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். அதனால் நீருவுக்கு அந்த நபர் மீது நம்பிக்கை வந்தது. அதை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து வீடியோ அழைப்பில் 4 பேர் வந்தனர். அவர்களில் ‘அந்த நம்பிக்கைக்கு உரிய அதிகாரி’யும் இருந்தார்.
அவர்கள் அனைவரும் சேர்ந்து மிரட்டி நெட் பேங்கிங் தகவல்களை நீருவிடம் இருந்து வாங்கியுள்ளனர். அதன் பிறகு சிறிது நேரத்தில் அடுத்தடுத்து ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என நீருவின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழிந்து கொண்டே சென்றது. இதுபோல் மொத்தம் 77 லட்சத்தை அந்த கும்பல் பறித்துக் கொண்டது.
இதையடுத்து செப்டம்பர் 24-ம் தேதி டெல்லி சிறப்பு பிரிவு போலீஸில் நீரு புகார் அளித்தார். சிறப்பு பிரிவு ஏசிபி மனோஜ் குமார், எஸ்ஐ கரம்வீர் ஆகியோர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு டெல்லி முகர்ஜி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அகிலேஷ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில், ஹரியானாவில் அம்ஜத், ஷாகித், ஷகில், ஹமித் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுவரை அந்த கும்பலிடம் இருந்து ரூ.3 லட்சத்தை போலீஸார் மீட்டு நீருவிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரின் மொபைல் போன்களை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது மேலும் பலரிடம் இதுபோல் பணம் பறித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.