அன்னமய்யா: தனது தலைமையிலான அரசின் செயல்பாட்டின் மூலம் ஆந்திர மாநிலத்தை ராம ராஜ்ஜியமாக கட்டியெழுப்புவோம் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை அன்று அன்னமய்யா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் ஆந்திராவின் எதிர்காலத்தை அழித்தது. மக்கள் நல திட்டங்களை சீர்குலைத்தது, நிதியை முறைகேடாக கையாண்டது, நீர்ப்பாசன திட்டங்களை முடக்கியது.
ஆந்திர மாநிலத்தை மீண்டும் கட்டமைப்பது தான் எங்கள் ஆட்சியின் நோக்கம். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ராயலசீமாவை ‘ரத்தின சீமா’வாக மாற்றுவோம். பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.
நீர்ப்பாசனம், முதலீடுகள் மற்றும் நலத்திட்ட பணி சார்ந்து பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளோம். ஆந்திராவை ராம ராஜ்ஜியமாக கட்டியெழுப்புவோம். மக்களின் ஆதரவுடன் தேவையிருந்தால் நான் மலைகளை கூட நகர்த்துவேன் என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜன சேனா கட்சி அடங்கிய என்டிஏ கூட்டணி 175 தொகுதிகளில் போட்டியிட்டு 164 தொகுதிகளில் வென்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 144 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வென்றது. சந்திரபாபு முதல்வராகவும், ஜனசேனா கட்சியின் நிறுவன தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராகவும் உள்ளனர்.