ராயசோட்டி: ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், ராயசோட்டியில் பெய்த கன மழை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் எஸ்.எம். நகரில் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழை காரணமாக பலரது வீடுகளில் மழை நீரும் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஷேக் முன்னி (28) எனும் பெண் தனது 4 வயது மகனுடன் வீட்டில் இருந்தார். அப்போது மழை வெள்ளத்தில் மகன் அடித்துச் செல்வதை தடுக்க அவரும் வெள்ளத்தில் இறங்கினார். இதனால் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரரான கணேஷ் (25) என்பவர் இவர்கள் இருவரையும் காப்பாற்ற வெள்ளத்தில் இறங்கினார். ஆனால் அவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். பின்னர், நள்ளிரவு நேரத்தில் 3 பேருமே சடலமாக மீட்கப்பட்டனர்.
இதேபோன்று, ராயசோட்டியில் வெள்ளிக்கிழமை இரவு ட்யூஷனுக்கு போய் விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் சிறுமி ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். 4 பேரின் உடல்களும் நேற்று பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆந்திர அரசு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது.