பாபட்லா: ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே உள்ள கிரானைட் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து ஆந்திர மாநில காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் பல்லிகுரவா கிராமத்துக்கு அருகே உள்ள சத்யகிருஷ்ணா கிரானைட் குவாரியில் நேற்று காலை 16 தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர்.
அப்போது, திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில், 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு நரசராவ்பேட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பாறைகளுக்கு அடியில் சிக்கியவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 2 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிரானைட் குவாரியில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததே விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்வர் சந்திரபாபு இரங்கல்: கிரானைட் குவாரி விபத்தில் உயிரிழந்த ஒடிசா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை, மருத்துவ உதவிகள் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திஉள்ளார்.