மும்பை: ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் ஆகிவிட முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
பாபு அப்துல் ரூஃப் சர்தார் என்பவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச நாட்டவர் என்றும், அவர் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை போலியாக வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலி ஆவணங்களுடன் இந்தியாவில் தங்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மேலும், ‘1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் இந்தியாவில் குடியுரிமை குறித்த கேள்விகளைத் தீர்மானிப்பதற்கான முக்கியமான சட்டமாகும். யார் இந்திய குடிமகனாக இருக்கலாம், எப்படி குடியுரிமையைப் பெறலாம், எந்தச் சூழ்நிலைகளில் அதை இழக்கலாம் என்பதை வகுக்கும் சட்டம் இது.
ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவரை இந்திய குடிமகனாக மாற்றாது. இந்த ஆவணங்கள் அடையாளம் காண அல்லது சேவைகளைப் பெறுவதற்காக மட்டும்தான். சட்டப்பூர்வ குடிமக்களுக்கும், சட்டவிரோத குடியேறிகளுக்கும் இடையே இந்தச் சட்டம் ஒரு தெளிவான கோட்டை வரைகிறது. இந்த வேறுபாடு முக்கியமானது. ஏனெனில், இது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கிறது. இது இந்திய குடிமக்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகள், சட்டவிரோதமாக குடியேறியவர்களால் பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது” என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சர்தாருக்கு ஜாமீன் மறுத்த உயர் நீதிமன்றம், அவரது ஆவணங்கள் மீது இன்னும் சரிபார்ப்பு நடந்து வருவதாகவும், விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் தலைமறைவாகக் கூடும் என்ற காவல் துறையின் அச்சம் உண்மையானது என்றும் குறிப்பிட்டது. சர்தார் தனது ஜாமீன் மனுவில், தான் இந்தியாவின் உண்மையான குடிமகன் என்றும், தான் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க உறுதியான அல்லது நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.