புதுடெல்லி: ஆதார் அட்டையை 12-வது அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஹாரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின்போது, 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதுதொடர்பாக ஏடிஆர் அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜோய்மால்ய பக்சி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆதார் அட்டையை, அடையாள ஆவணமாக ஏற்க வாக்குச்சாவடி அதிகாரிகள் மறுக்கின்றனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 11 ஆவணங்கள் மட்டுமே ஆதாரங்களாக ஏற்படுகின்றன. எனவே 12-வது ஆவணமாக ஆதார் அட்டையை ஏற்க உத்தரவிட வேண்டும்.
தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி: ஆதார் அட்டை, அடையாள ஆவணமாக ஏற்கப்பட்டு வருகிறது. ஆனால், குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்க முடியாது. வாக்காளர் பட்டியலை தயார் செய்யும்போது குடியுரிமையை சரிபார்க்கும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.இவ்வாறு வாதம் நடந்தது.
பிறகு நீதிபதிகள் கூறும்போது, “ஆதார் அட்டையை குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்க முடியாது. எனினும், அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியும். பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின்போது ஆதார் அட்டையை 12-வது அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை செப்.15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி மேற்கொள்வது தொடர்பான கால அட்டவணையை வெளியிட கோரி உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்யாய் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு பதில் அளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.