புதுடெல்லி: ‘வாக்கு திருட்டு’ தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு 3 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.
‘‘மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக.வுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்குகள் திருடப்பட்டுள்ளன. கர்நாடகாவில் உள்ள மகாதேவபுரா தொகுதியிலும் வாக்குகள் திருடப்பட்டுள்ளன’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த தலைமை தேர்தல் அதிகாரிகள், ‘‘வாக்கு திருட்டு உண்மை என்றால் சட்டப்படி உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு ராகுல் காந்தி அளிக்க வேண்டும். அல்லது இந்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி கடிதம் அனுப்பினர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா ஆகிய 3 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மீண்டும் ராகுல் காந்திக்கு நேற்றுமுன்தினம் கடிதம் அனுப்பி உள்ளனர்.
அதில், ஆதாரங்கள், உறுதிமொழி பத்திரம் ஆகியவற்றை கேட்டுள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மகாதேவபுரா தொகுதியில் பெண் ஒருவர் 2 முறை வாக்களித்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். அந்தப் பெண்ணின் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டு ஆதாரமாக கூறினார்.
இதுகுறித்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி வி.அன்புகுமார், ராகுல் காந்திக்கு 2-வது முறையாக கடிதம் அனுப்பினார். அதில், ‘‘நீங்கள் கூறியபடி ஷகுன் ராணி என்ற அந்த பெண்ணின் வாக்காளர் அட்டை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
நீங்கள் (ராகுல்) கூறியது போல் மக்களவை தேர்தலில் 2 முறை வாக்களிக்கவில்லை. ஒரு முறைதான் வாக்களித்தேன் என்று அவர் கூறியுள்ளார். நீங்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டிய அந்த பெண்ணின் ஆவணம் (டிக் அடித்து காட்டப்பட்டது), தேர்தல் அதிகாரியால் வழங்கப்படவில்லை’’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஷகுன் ராணியின் பெயரை தேர்தல் ஆணையம் வழங்கியது போல் தனி பட்டியலில் ராகுல் காட்டியுள்ளார். அது சித்தரிக்கப்பட்ட ஆவணம். மகாராஷ்டிர தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.சொக்கலிங்கம்தான் அவருக்கு கடிதம் கடிதம் அனுப்பினார்.
கடந்த 7-ம் தேதி ராகுல் காந்திக்கு அனுப்பிய அந்தக் கடிதத்தில், ‘‘குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். உண்மைதான் என்று கூறுவதற்கு உறுதிமொழி பத்திரத்தை கையெழுத்திட்டு சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருந்தார். அதற்கு 10 நாட்கள் அவகாசமும் தேர்தல் அதிகாரி சொக்கலிங்கம் வழங்கி உள்ளார்.
ஹரியானா தலைமை தேர்தல் அதிகாரி னிவாசனும், ராகுல் காந்தி பதில் அளிக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கி உள்ளார். போலி ஆவணங்களை காட்டி குற்றம் சாட்டினால், அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை ராகுல் காந்தி எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பிஎன்எஸ் சட்டம் 337-வது பிரிவின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்து ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கவாய்ப்புள்ளது. போலி ஆவணங்களை காட்டியது நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.