விஜயவாடா: ஆந்திராவில் ஆட்டோ, டாக்ஸி, மேக்ஸி கேப் போன்ற வாடகை வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று விஜயவாடாவில் தொடங்கி வைத்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ‘ஆட்டோ ஓட்டுநர்களின் சேவையில்’ எனும் புதிய திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
அறிவித்ததை போலவே அறிவிக்கப்பட்ட தேதியில், இத்திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதிலும் ஆட்டோ, டாக்ஸி, மேக்ஸி கேப் போன்ற வாடகை வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இத்தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.436 கோடி செலவாகும். இதன் மூலம் 2.64 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள், 20,072 டாக்ஸி ஓட்டுநர்கள், 6,400 மேக்ஸி கேப் ஓட்டுநர்கள் என மொத்தம் 2.90 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
கடந்த 2024-ம் ஆண்டு தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு 94 சதவீத வாக்குகளை வழங்கி மக்கள் மாபெரும் வெற்றியை கொடுத்தனர். கடந்த 15 மாதங்களில் எங்களுடைய ஆட்சியில் பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி உள்ளோம். சூப்பர் சிக்ஸ் திட்டம் சூப்பர் ஹிட் ஆனது. ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியே முதியோர், மாற்றுத்திறனாளிகள், தனித்து இருக்கும் பெண்கள் மற்றும் தீராவியாதி உள்ளவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.33 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. மாநிலம் முழுவதும் சாலைகளை சீரமைத்து, அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தையும் எங்கள் அரசு அமல்படுத்தி உள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
விழாவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள் லோகேஷ் உள்ளிட்டோர் ஆட்டோக்களில் வந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைவரும் காக்கிச் சட்டை அணிந்து விழாவில் கலந்துகொண்டனர்.