புதுடெல்லி: இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் இல்லத்தில் சந்திக்க உள்ளனர்.
பாஜக வெற்றி பெறுவதற்காக 2024 மக்களவைத் தேர்தலில் 70-80 தொகுதிகளில் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று ராகுல் காந்தி நேற்று குற்றம்சாட்டியது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி இண்டியா கூட்டணி கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 7ஆம் தேதி ராகுல் காந்தியின் டெல்லி இல்லத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். பிஹாரில் நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியல் சர்ச்சை, ஆபரேஷன் சிந்தூர், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ட்ரம்பின் மத்தியஸ்த பேச்சு ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், விரைவில் நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து இண்டியா கூட்டணியின் இரண்டாவது கூட்டம் இதுவாகும். முன்னதாக ஜூலை 19 ஆம் தேதி நடைபெற்ற காணொலி காட்சி வாயிலான கூட்டத்தில் என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 24 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், தேசிய மாநாட்டு தலைவர் ஃபரூக் அப்துல்லாவும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர், “பிஹாரில் தற்போது ஆட்சியில் உள்ள கட்சி வெற்றி பெறும் வகையில் ஏற்கனவே ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர். ஆகஸ்ட் 7 ஆம் தேதி இண்டியா கூட்டணி தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். நான் ராகுல் காந்தியை சந்திக்கப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.