புதுடெல்லி: அவசரகால பயன்பாட்டுக்கான 4 மருந்துகளுக்கு மத்திய அரசு விலை உச்சவரம்பு நிர்ணயம் செய்துள்ளது. இதுபோல் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பி உள்ளிட்ட 37 மருந்துகளுக்கு சில்லறை விலை நிர்ணயம் செய்துள்ளது.
மூச்சுத்திணறல், இருமல், நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மார்பு இறுக்கம் போன்றவற்றை தடுக்க பயன்படுத்தும் இப்ராட்ரோபியம் (Ipratropium) உள்ளிட்ட மருந்துகள் அவசரகால பயன்பாட்டு மருந்துகளாக உள்ளன. இவற்றுக்கான விலை உச்சவரம்பு ஒரு மில்லிக்கு ரூ.2.96 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
உயர் ரத்த அழுத்த அவசர சூழலில் ரத்த அழுத்தத்தை விரைவாக குறைக்கவும், அறுவை சிகிச்சையின்போது ரத்தப்போக்கை குறைக்கவும் கடுமையான இதய செயலிழப்பு நிகழ்வுகளிலும் ஊசி மருந்தான சோடியம் நைட்ரோபுரஸைடு (Sodium Nitroprusside) பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை உச்சவரம்பு ஒரு மில்லிக்கு ரூ.28.99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் டில்டியாசெம் (Diltiazem) ஒரு காப்ஸ்யூலுக்கு ரூ.26.77 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உச்சவரம்பு விலையை விட அதிக விலையில் (ஜிஎஸ்டியுடன் சேர்த்து) விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் உடனடியாக தங்கள் விலைகளை குறைக்க வேண்டும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) அறிவித்துள்ளது.