கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாக கேன்டீனில் மாட்டிறைச்சி (பீஃப்) உணவுகள் சாப்பிடவோ, சமைத்து விற்கவோ கூடாது என்று புதிதாக பொறுப்பேற்ற மேலாளர் உத்தரவிட, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் நடத்திய நூதனப் போராட்டம் கவனம் பெற்றுள்ளது.
இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், “கொச்சி கனரா வங்கியின் மேலாளராக அண்மையில் பிஹாரை சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், கொச்சி கனரா வங்கியில் உள்ள கேன்டீனில் பீஃப் உணவு விற்கக் கூடாது, ஊழியர்கள் பீஃப் உணவு கொண்டுவந்து சாப்பிடக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார். இதனையடுத்து நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ” என்றனர்.
“முதலில், அவர் ஊழியர்களுக்கு கொடுத்த பணி நெருக்கடியை கண்டித்தே போராட்டத்தை ஒருங்கிணைத்தோம். ஆனால், அவர் உணவுக் கட்டுப்பாடு விடுத்ததும் தெரிந்ததால் இந்தப் போராட்டத்தில் பீஃப் உணவை பரிமாறவும் முடிவு செய்தோம்.” என்று இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்தது.
இந்தப் போராட்டத்தின் போது கனரா வங்கி அலுவலகத்துக்கு வெளியே திரண்டிருந்த ஊழியர்கள் பரோட்டா, பீஃப் கிரேவி சாப்பிட்டனர்.
வங்கி கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.அனில் கூறுகையில், “இங்குள்ள சிறிய கேன்டீனில் வாரத்தின் சில நாட்களில் மட்டும் பீஃப் உணவு பரிமாறப்படுகிறது. ஆனால், புதிதாக வந்த மேலாளர் அதற்கு தடை விதித்தார். வங்கி என்பது அரசமைப்பின் சட்ட திட்டங்களின் படி இயங்குகிறது. இங்கே உணவு என்பது தனிப்பட்ட விருப்பம். இந்தியாவில், அவரவர் விருப்பமான உணவை உண்ண இயலும். நாங்கள் யாரையும் பீஃப் சாப்பிட கட்டாயப் படுத்தவில்லை. இங்கே பீஃப் உண்ணும் போராட்டம் நடந்தது உணவுக் கட்டுப்பாட்டுக்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் முறை.” என்றார்,
இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இடதுசாரி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல்ஏ ஜலீல் போராட்டத்தை வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “என்ன உடுத்த வேண்டும், உண்ண வேண்டும் என்பது உயரதிகாரிகளால் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயமல்ல. இந்த மண் சிவந்த மண். இங்கே செங்கொடி பறக்கிறது. செங்கொடி பறக்குமிடத்தில் பாசிஸத்துக்கு எதிராக துணிச்சலாகப் பேசலாம். இங்கே யாரும் உங்களை துன்புறுத்திவிட முடியாது. கம்யூனிஸ்ட்கள் இங்கே இணைந்து செயல்படுகின்றனர். தோழர்கள் இங்கே ஒருபோதும் காவிக் கொடி பறக்க விடமாட்டார்கள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.