புதுடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வசித்து வரும், தலைமை நீதிபதிக்கான அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த சூழலில், தான் அரசு பங்களாவை காலி செய்யாததற்கான காரணத்தை சந்திரசூட் விளக்கியுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள இந்திய தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை, முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் காலி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்ற நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில், இந்திய தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்து உச்ச நீதிமன்றத்தின் வீட்டுவசதி தொகுப்புக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த பங்களாவில் முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி தங்கியுள்ளார் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், ‘முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம் இருந்து கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள பங்களா எண் 5ஐ தாமதமின்றி உடனடியாக கையகப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இந்த பங்களாவில் தங்குவதற்கு அவருக்கு வழங்கப்பட்ட ஆறு மாத காலம் மே 10, 2025 அன்று முடிவடைந்தது. மேலும், கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி மே 31, 2025 அன்று முடிவடைந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரசூட் விளக்கம்: இதுகுறித்து விளக்கமளித்துள்ள சந்திரசூட், ‘எனது இரு மகள்களுக்கு நெமலின் மயோபதி எனும் மரபணு பிரச்சினை மற்றும் இணை நோய்கள் உள்ளன. அவர்களுக்கு எய்ம்ஸில் உள்ள மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் தங்கும் வகையில் சிறப்பு வசதிகள் கொண்ட வீடு எனக்குத் தேவை. இதற்காக நான் பிப்ரவரி மாதம் அலைந்து திரிந்துவிட்டேன். சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களையும் முயற்சித்தேன், ஆனால் அவை எதுவும் எனக்கு ஒத்துவரவில்லை.
அரசாங்கம் எனக்கு தற்காலிகமாக ஒரு வீட்டை வாடகைக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த பங்களா இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்ததால், அங்கே தற்போது பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அவை முடிந்தவுடன் நான் வீட்டை மாற்றிவிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்