புதுடெல்லி: கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றார். கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வரை அவர் குஜராத் முதல்வர் பதவியில் நீடித்தார். கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம்தேதி அவர் நாட்டின் பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து 3-வது முறையாக அவர் பிரதமராக பதவியேற்று நாட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.
அரசின் தலைமைப் பொறுப்பில் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக பதவியேற்றேன். பூகம்பம், புயல், வறட்சி, அரசியல் குழப்பம் நிறைந்த காலத்தில் முதல்வராக பணியாற்றினேன். பல்வேறு சவால்களை கடந்து குஜராத்தை கட்டியெழுப்பினேன். நாட்டு மக்களுக்கு திறம்பட சேவையாற்றினேன்.
நான் முதல்வராக பதவியேற்றபோது எனது அம்மா ஓர் அறிவுரையை கூறினார். ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும். எந்த சூழலிலும் ஒரு பைசாகூட லஞ்சம் வாங்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார். அவரது அறிவுரை, ஆலோசனை என்னை இன்றளவும் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டில் மக்கள் ஆதரவால் நாட்டின் பிரதமராக பதவியேற்றேன். கடந்த 11 ஆண்டு ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். உலக பொருளாதாரத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது. அனைத்து துறைகளிலும் சுய சார்பு இந்தியா திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கிறது.
நாட்டுக்கு சேவையாற்றுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இந்திய அரசியலமைப்பு சட்டம் எனக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற லட்சியத்தை எட்ட இன்னும் கடினமாக உழைப்பேன். என் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்த இந்திய மக்களுக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.