புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் சாசனத்தை மாற்றி எழுத முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் காரசாரமாக வாதிட்டார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்துக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தனர். மேலும், சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒரு மாத காலத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாத காலத்திலும் ஒப்புதல் அளிக்க வேண்டு மென கால நிர்ணயம் செய்தும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, அதிகாரப்பகிர்வு தொடர்பாக அரசியலமைப்பு சட்ட ரீதியாக 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்துக்கு எழுப்பி குடியரசுத் தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு விடை காணும் வகையில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று தொடங்கியது.
அப்போது தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோரும், கேரள அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் ஆஜராகி வாதிட்டனர்.
“இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பத்த தீர்ப்பின் வாயிலாக பதிலளிக்கப்பட்டுள்ளது. ‘கூடிய விரைவில்’ என்பதற்கு விளக்கம் காணப்பட்டு தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசியல் சாசன பிரிவு 143-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் கேள்விகளை எழுப்பி விளக்கம் கோர முடியாது. மொத்தத்தில், இந்த கேள்விகளை குடியரசுத் தலைவரின் கேள்விகளாக கருத்தில் கொள்ளாமல், குடியரசுத் தலைவர் வாயிலாக மத்திய அரசு எழுப்பியுள்ள கேள்விகளாகவே கருத வேண்டும்” என வாதிட்டனர்.
அதையடுத்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியலமைப்பு சட்ட ரீதியாக சிக்கல் எழுந்தால் ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்குமான பங்கு என்ன என்பதை விளக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் குடியரசுத் தலைவர் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார். கால நிர்ணயம் செய்து இரு நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பே இறுதியாகி விடாது.
ஒருவேளை அரசியல் சாசன அமர்வு அந்த தீர்ப்பு தவறு என்றோ அல்லது அதற்கு எதிர்மறையான தீர்ப்பையோ வழங்கலாம். உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள இந்த கால நிர்ணயத்தால் சிக்கல் எழுந்துள்ளது. ஏனெனில், இவ்வாறு கால நிர்ணயம் செய்யக்கூடாது என்ற நோக்கில்தான் ‘கூடிய விரைவில்’ என்ற வார்த்தையை சட்டமேதை அம்பேத்கர் பயன்படுத்தியுள்ளார்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூரியகாந்த், “இந்த வழக்கு மேல்முறையீட்டு வழக்கு அல்ல. குடியரசுத் தலைவரின் விளக்கம் கோரும் கடிதம் மீதான விசாரணை, அவ்வளவுதான்” என்றார். அதற்கு அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, “ஒரு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அதுதொடர்பாக சந்தேகம் இருந்தால் அரசியல் சாசன பிரிவு 143-ஐ பயன்படுத்தி குடியரசுத் தலைவர் விளக்கம் கோர முடியும்.
அந்த கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றமும் பதிலளிக்க வேண்டும். தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டமியற்றும் அதிகார வரம்புக்குள் சென்றுவிட்டது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதியுள்ளது. இவ்வாறு தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் சாசனத்தை மாற்றி எழுத முடியாது” என காரசாரமாக வாதிட்டார்.
அப்போது நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகளை எதிர்த்து மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாதா, இந்த வாதங்களை எப்படி விளக்கம் கோரும் விசாரணையில் முன்வைக்க முடியும், உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுள்ள இந்த விளக்கம் பலவகையிலும் இருக்கலாம்’’ என கருத்து தெரிவித்தார். பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.