மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நாளை (ஜூலை 9) நாடு தழுவிய அளவிலான வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்க அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
தனியார்மயமாக்கல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பொருளாதார மற்றும் தொழிலாளர் நல சட்டங்களை மாற்றியமைத்தல் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மத்திய அரசின் கொள்கைகள் ஆகியவற்றை கண்டித்து நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மற்றும் பல்வேறு முன்னணி பொதுத்துறை வங்கிகளின் தொழிலாளர் கூட்டமைப்புகள் ஜூலை 9-ல் நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதில், ஏஐபிஇஏ, ஏஐபிஓஏ, பிஇஎப்ஐ, ஏஐஐஇஏ, ஐஎன்டியூசி உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்க உள்ளன. மேலும், வங்கி மற்றும் காப்பீட்டு (எல்ஐசி) துறையை தனியார்மயமாக்குதல் மற்றும் பங்கு விற்பனை திட்டத்தை கண்டித்தும், காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு, பொது காப்பீட்டு நிறுவனங்களை ஒரே நிறுவனமாக இணைப்பதற்கு எதிப்பு தெரிவித்தும் இந்த போராட்டத்தில் வங்கி ஊழியர் மற்றும் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் கூட்டமைப்பும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.
ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிடவும், போதுமான பணியாளர்களை முறைப்படி நியமிக்க கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தொழிலாளர் கூட்டமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலில் இந்த வேலைநிறுத்தம் மே 20-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து அது ஒத்திப்போடப்பட்டது.