தனது தாய் எப்போது வருவார் என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த விமானப் பணிப்பெண்ணின் மகள் காத்திருக்கும் செய்தி பலரது கண்ணில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்ட போயிங் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர், பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்ற நபர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்தில் விமானத்தில் பணியாற்றிய பணிப்பெண்ணான அபர்ணா மகாதிக்கும் உயிரிழந்து விட்டார். அபர்ணா மகாதிக், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான ஆதித்தி சுனில் தாத்கரேவின் நெருங்கிய உறவினர் ஆவார். ஆனால் தாயார் இறந்துவிட்டார் என்பது கூடத் தெரியாமல் அவரது மகள் காத்திருக்கிறார். தொடர்ந்து அவரது செல்போனுக்கு போன் செய்து கொண்டிருக்கும் அந்தக் குழந்தை. தனது தாய் போனை கண்டிப்பாக எடுப்பார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அபர்ணா மகாதிக்கின் மகள் கூறும்போது, “எனது தாய் அபர்ணா விரைவில் வருவார். அவருடைய செல்போனுக்கு தொடர்ந்து நான் போன் செய்து வருகிறேன். அவர் தற்போது வேலையில் இருப்பார். அதனால் போனை எடுக்கவில்லை. அவர் நிச்சயம் எனக்கு மீண்டும் போன் செய்வார்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். தாய் மீதான அதீத பாசத்தில் பேசும் அந்த சிறுமியின் பேச்சைக் கண்டு அவரது உறவினர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இதனிடையே அபர்ணாவின் கணவர், டிஎன்ஏ சோதனைக்காக அகமதாபாத் சென்றுள்லார்.
இதுகுறித்து மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்தி சுனில் தாத்கரே கூறும்போது, “அபர்ணா இறந்த செய்தி கேட்டு உடைந்துவிட்டேன். அபர்ணா மிகவும் தன்னம்பிக்கை உடைய பெண். விமானப் பணிப்பெண், வீட்டை கவனித்துக் கொள்ளுதல் என 2 வேலைகளையும் திறம்பட நிர்வகித்து வந்தார். அண்மையில் எங்கள் உறவினரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கும் வந்திருந்தார்” என்றார்.
இதேபோல், விமானத்தில் கேபின் சூப்பர்வைசராக இருந்த ஷிரத்தா தவாணும் உயிரிழந்துவிட்டார். வடகிழக்கு மும்பையை சேர்ந்த ஷிரத்தா, விமானத்தில் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கணவரிடம் பேசியுள்ளார். இவருக்கு 15 வயதான 10-வது படிக்கும் மகள் உள்ளார். ஷிரத்தாவின் கணவரும், ஏர் இந்தியாவில் பணியாற்றி வருகிறார். டிஎன்ஏ ஆய்வுக்காக அகமதாபாத்துக்குச் சென்றுள்ளார்.
அதேபோல், மும்பையின் பவாய் பகுதியைச் சேர்ந்த விமான கேப்டன் சுமீத் சபர்வாலும் விமான விபத்தில் உயிரிழந்தார். சுமீத்தின் இழப்பை அவரது 88 வயதான தந்தையால் தாங்க முடியவில்லை. அவரது வீட்டுக்கு வரும் உறவினர்களை அவரைத் தேற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
11 ஆண்டுகளாக பணி: பத்லாப்பூரைச் சேர்ந்த தீபக் பதக், ஏர் இந்தியா விமானத்தில் ஊழியராக இருந்தார். விமானம் புறப்படுவதற்கு முன்பு தீபக் பதக், தனது தாயிடம் பேசியுள்ளார். சுமார் 11 ஆண்டுகளாக ஏர் இந்தியாவில் அவர் வேலை பார்த்து வந்தார். அவரது இழப்பை அவரது தாயாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது நண்பர் கூறும்போது, “விமான விபத்து நடந்த அன்று தீபக் பதக், ஃபேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதுவே அவரது கடைசி செய்தியாக மாறிவிட்டது. அவருக்கு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்றார்.