புதுடெல்லி: சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: பிரிவினையின் போது தங்கள் குடும்பங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியாவுக்கு எப்படி வரநேர்ந்தது என்பது குறித்து சிந்தி நண்பர்களிடம் ஏராளமான கதைகளை கேட்டிருக்கிறேன். இந்தியாவில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பி சிறப்புடன் உள்ளனர்.
அதேபோன்று, விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில் வல்லுநர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்புவதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் செழித்து வளர்ந்துள்ள சிந்தி சமூகத்தினரைப் போல அவர்களும் தங்களது சொந்த நாட்டில் வாழ்க்கையை கட்டியெழுப்ப ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப 5 ஆண்டுகள் ஆகலாம். ஆனால். அது உங்களை வலிமையாக்கும். பயத்தில் வாழாதீர்கள். துணிச்சலான நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக செய்வீர்கள். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.