புதுடெல்லி: அமெரிக்கா அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை அடுத்த வாரம் இந்தியாவுக்கு விநியோகம் செய்ய உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு 22 அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்கா மற்றும் போயிங் நிறுவனத்துடன் இந்திய விமானப் படை ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன்படி கடந்த 2020-ம் ஆண்டுக்குள் 22 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா விநியோகம் செய்தது. அதன்பின்னர் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் முதல் முறையாக பதவியேற்ற பின்னர் அதே ஆண்டின் பிற்பகுதியில் மேலும் 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் வாங்க 600 மில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்காவுடன் இந்திய விமானப் படை ஒப்பந்தம் செய்தது.
அந்த ஒப்பந்தத்தின் படி கடந்த 2024-ம் ஆண்டு மே – ஜூன் மாதங்களில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு விநியோகம் செய்திருக்க வேண்டும். ஆனால், சர்வதேச அரசியல், போர் போன்ற காரணங்களால் இந்தியாவுக்கு அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், அடுத்த வாரம் 3 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை இந்திய விமான படையிடம் அமெரிக்கா ஒப்படைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அநேகமாக வரும் 21-ம் தேதி 3 ஹெலிகாப்டர்களும் இந்தியாவிடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஹெலிகாப்டர்களை பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்த விமானப் படை முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் எல்லையில் விமானப் படையின் பலம் மேலும் வலுப்பெறும்.
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் எந்த காலநிலையிலும் இயங்கக் கூடியது. துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. பகல் இரவு என எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவானது. சிறந்த ரேடார், சென்சார், தகவல் தொடர்பு கருவி, தானியங்கி போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த அப்பாச்சி ஹெலிகாப்டரில் உள்ளன.