புதுடெல்லி: அமெரிக்காவின் வரி உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து, நாட்டில் சுயசார்பு இந்தியா (ஆத்ம நிர்பார்) சபதம் ஏற்கும் பிரச்சாரத்தை பாஜக தொடங்கவுள்ளது.
பாஜக சார்பில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 3 மாதங்களுக்கு இந்தப் பிரச்சாரம் நடைபெறும். இந்தப் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சுதேசி நோக்குள்ள திட்டங்கள், ஆத்ம சுயசார்பு திட்டங்கள் குறித்த விளக்கங்கள் இடம்பெறும்.
தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் செட்பம்பர் 25-ம் தேதி தொடங்கும் இந்தப் பிரச்சாரம் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் பிறந்தநாளான டிசம்பர் 25-ம் தேதியுடன் நிறைவுறும். உள்நாட்டு வியாபாரிகளுக்காக குரல் கொடுங்கள் என்ற நோக்கத்துடன் தேசிய அளவில் இந்தப் பிரச்சாரத்தை பாஜக முன்னெடுத்துச் செல்லவுள்ளது.
அமெரிக்க நாட்டில் இந்தியப் பொருட்களுக்கு வரிவிதிப்பை அதிகமாக்கியுள்ள நிலையில், உள்நாட்டிலேயே நமது வர்த்தகர்கள் சுயசார்படைய உதவும் நோக்கில் இந்தப் பிரச்சாரம் நடைபெறவுள்ளது.