புதுடெல்லி: அமெரிக்காவின் எந்த சட்டத்தையும் இந்தியா மீறவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர், இன்னும் 4 வாரங்களில் இதற்கு தீர்வு காணப்பட்டுவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா அதிக வரி விதிப்பதாகக் கூறி இந்திய பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அபராதமாக கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் அளித்தப் பேட்டியில், “அமெரிக்கா நிலையற்ற கொள்கையைக் கொண்டிருக்கிறது. எந்த அடிப்படையில், ரஷ்யாவை எதிரியாக டொனால்டு ட்ரம்ப் அறிவிக்கிறார். எந்த அடிப்படையில், இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிக்கிறார்
இரண்டு நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினை, ட்ரம்ப் எதிரியாக அறிவிக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு வரியை தண்டனையாக விதிக்கிறார். இத்தனைக்கும், இந்தியா அமெரிக்காவின் எந்த ஒரு சட்டத்தையும் மீறவில்லை. இதனிடையே,
இன்னும் சில வாரங்களில் புதினை ட்ரம்ப் சந்திக்கப் போகிறார் என்ற செய்தி வந்துள்ளது. எனவே, இது ஒரு நிலையற்ற காலம்.
பிரதமரின் நெருக்கடி கால நிர்வாகியாக உள்ள பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தற்போது மாஸ்கோவில் உள்ளார். அவர் புதினை சந்திப்பார். வரி விதிப்பு, வர்த்தகம், பாதுகாப்பு ஆகியவை குறித்து அவர் நிச்சயம் பேசுவார்.
7 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி, சீனா செல்ல உள்ளார். அதனால்தான் பெரிய அளவிலான நடவடிக்கை மற்றும் எதிர்வினை நடைபெறுகிறது. எனவே, ட்ரம்ப் இன்னும் நாடகங்களை நடத்துவார். எனினும், இறுதியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தீர்வு காணப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன்.
அமெரிக்காவின் வரி விதிப்பு அணுகுமுறையை பிரதமர் மோடி மிகவும் முதிர்ச்சியாக கையாள்கிறார் என்று கருதுகிறேன். அவர் சக்திவாய்ந்த மவுனத்தை கடைப்பிடிக்கிறார். அவர் வலையில் விழவில்லை. அவரது அமைதியும் அவரது செயலும் மிகவும் சக்திவாய்ந்த செய்தியை வழங்குகின்றன. இந்தியாவின் பலம் இந்திய மக்களிடம்தான் உள்ளது. இதுதான் நமது சுதேசி வெளியுறவுக் கொள்கையின் மையமாக உள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு அதன் குடிமக்களின் நலனில்தான் உள்ளது. நமது கொள்கைகள், நாட்டு மக்களின் பாதுகாப்பையும் செழிப்பையும் எந்த அளவுக்கு பாதுகாக்கின்றன என்தன் மூலம் அளவிடப்படும். பிரதமரின் மனநிலை இதையே கருத்தில் கொண்டுள்ளது. இந்திய விவசாயிகளை பாதிக்கும் முடிவுகளை பிரதமர் எடுக்க மாட்டார். இவ்விஷயத்தில் அவர் சரணடைய மாட்டார். இதை நாட்டு மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக 25% வரி என்கிறார் ட்ரம்ப். ரஷ்யாவின் எரிசக்தியில் 37% நாம் வாங்குகிறோம். ஆனால், சீனா 47%ஐ வாங்குகிறது. ஆனால், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதை இரட்டை நிலைப்பாடு என்று விமர்சிக்கலாமா?
அமெரிக்காவும் தனது அணுசக்தி தொழிலுக்கு ரஷ்யாவிடம் இருந்து யுரேனியத்தை வாங்குகிறது. அப்படியானால், அமெரிக்கா மீதும் ட்ரம்ப் வரி விதிப்பாரா? கடந்த ஆண்டில் ரஷ்யாவிடம் ஐரோப்பிய நாடுகள் 67 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபட்டன.
தற்போதைய நிலை என்பது மிகவும் குழப்பமாகவே உள்ளது. ஏனெனில், கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா உடனான இந்தியாவின் உறவு மிகவும் வலுவடைந்து வருகிறது. நட்பை வலுப்படுத்துவதில் இந்திய அரசும் மக்களும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். ஆனால், காயப்படுத்தும் அணுகுமுறையை ஏன் ட்ரம்ப் கையில் எடுக்க வேண்டும்?” என தெரிவித்துள்ளார்.