பாட்னா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘பிரதமர் மோடி அமெரிக்காவின் இசைக்கு ஏற்ப நடனமாடுகிறார்’ என்று கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், “இந்த நாட்டில் மத்திய அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் அனைவரும் பார்க்கிறீர்கள். ட்ரம்ப் இந்தியாவுக்கு 50% வரி விதித்தார். போர் நிறுத்தத்துக்கு தான் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் 28 முறை கூறியுள்ளார். ஆனால், இதுகுறித்து பிரதமர் மோடி இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை. டொனால்டு ட்ரம்ப் பொய் சொல்கிறார் என்று பிரதமர் மோடி இன்னும் சொல்லவில்லை.
பிரதமர் மோடி மிகவும் பலவீனமாகிவிட்டார், அவர் அமெரிக்காவின் இசைக்கு ஏற்ப நடனமாடுகிறார். 50% வரி விதிப்பு நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை. அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். இவர்கள் நாட்டை சேதப்படுத்துவார்கள். ஆனால் பாருங்கள்… இவர்கள் பிஹாருக்கு வந்து நாங்கள் விஸ்வகுருவாகிவிட்டோம் என்று கூறுவார்கள்” எனத் தெரிவித்தார்.
50% வரி: முதலில் இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 7- ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால், கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.