லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவுவது மேற்கு வங்க அரசியலில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அதுகுறித்து திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மஹுவா மொய்த்ரா பேசும் போது, “இந்திய எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பி.எஸ்.எப். உள்ளிட்ட ஐந்து படைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. அதற்கு முழு பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான். அப்படியிருக்க மேற்கு வங்க அரசை எப்படி பா.ஜ.கவினர் குறை கூற முடியும்?
இந்தியாவின் எல்லைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், ஊடுருவல்காரர்கள் நூற்றுக் கணக்கில் நுழைந்தால், நம் பெண்களை அவமதித்தால், நம் நிலங்களை அபகரித்தால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையை வெட்டி மேஜையில் வைக்க வேண்டும்” என்றார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசியுள்ள கருத்துகள் பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பேசியதாவது: மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து, திரிணமூல் காங் கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பேசிய பேச்சுகள் மன்னிக்க முடியாதவை. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைமை மன்னிப்புக் கேட்கவேண்டும். அவரது பேச்சை நான் கண்டிக்கிறேன்.
மத்திய அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கக்கூடிய அமைச்சர் குறித்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா தெரிவித்த சர்ச்சை கருத்துகள் ஆட் சேபனைக்குரியதாக உள்ளன.
திரிணமூல் காங்கிரஸின் அரசியல் முறைகேடுகளை வெளிப்படுத்தும் இந்தக் கருத்து, ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியரையும் அவமதிப்பதாகும். இந்த அநாகரீகமான கருத்துக்காக திரிணமூல் காங்கிரஸ் தலைமை இந்த நாட்டிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.