புதுடெல்லி: அபுதாபியில் சமீபத்தில் நடந்த லாட்டரி டிக்கெட் குலுக்கலில் உ.பி.யை சேர்ந்த சந்தீப் குமார் பிரசாத் (30) என்பவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.36 கோடியாகும்.
இதுகுறித்து சந்தீப் குமார் பிரசாத் கூறியதாவது: என் வாழ்க்கையில் இவ்வளவு மகிழ்ச்சியான தருணத்தை சந்திப்பது இதுவே முதல் முறை. ஆகஸ்ட் 19 அன்று 200669 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டை வாங்கினேன்.
செப்டம்பர் 3-ம் தேதி நடந்த நேரடி குலுக்கலின் போது நான் வாங்கிய அபுதாபி பிக் டிக்கெட்டுக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக கிடைத்துள்ளதாக தொகுப்பாளர் ரிச்சர்ட் அறிவித்த போது என் வாழ்க்கையே மாறிவிட்டது.
துபாய் டிரைடாக்ஸில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறேன். உத்தர பிரதேசத்தில்தான் எனது மனைவி, இரண்டு சகோதரர் மற்றும் ஒரு சகோதரி வசிக்கின்றனர்.
இவ்வளவு பெரிய பரிசை வென்றுள்ள நிலையில் இப்போது குடும்பத்துடன் சேர்ந்திருக்க இந்தியா திரும்ப ஆர்வமாக உள்ளேன். அங்கு சொந்த தொழிலையும் தொடங்க விரும்புகிறேன். இவ்வாறு பிரசாத் தெரிவித்தார்.