கொல்கத்தா: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி விமர்சித்துள்ளார்
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த திரிணமூல் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “இந்த 50 சதவீத வரி விதிப்பு நமது நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது நமது வெளியுறவு கொள்கையின் தோல்வி. இந்தியா இதை கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து நம்மை இழிவுபடுத்த விரும்புபவர்களுக்கு இவ்வளவு அதிகாரம் கிடைத்தது எப்படி? 56 அங்குல மார்பு இருப்பதாகக் கூறும் ஓர் அரசாங்கத்தால் இதை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?.
நான் இவற்றைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், ஆசிய நாடுகளுக்கான அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானை அவர்கள் கண்டிக்கவே இல்லை. இந்தத் தோல்விக்கு யார் பொறுப்பு? கோவிட் நேரத்தில் குஜராத்தில் டொனால்டு ட்ரம்ப்புக்காக பிரச்சாரம் செய்தது யார்? ட்ரம்ப்புக்காக பிரச்சாரம் செய்ய டெக்சாஸுக்கு யார் சென்றது? பாஜக தொண்டர்கள் ட்ரம்ப்பின் வெற்றிக்காக யாகம் செய்தனர். இவை அனைத்தும் சமூக ஊடகங்களில் உள்ளன.
பிரதமர் மோடி 2019-ஆம் ஆண்டு டெக்சாஸில் ட்ரம்புக்காக பிரச்சாரம் செய்தார். எனவே, இப்போது ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரியை விதிக்கக் காரணம் அவர்தான். இதற்கு பொறுப்பு அவர்தான். இந்தியப் பொருளாதாரத்தைக் கொல்ல யாருக்கும் சக்தி இல்லை. அது இந்திய மக்களின் அன்பு மற்றும் பாசத்தால் உயிர் வாழ்கிறது. ஆனால் இந்திய பொருளாதாரம் தற்போது ஐசியுவில் உள்ளது” என்று தெரிவித்தார்.